Monday 2 April 2012

திருத்தி எழுதிய தீர்ப்புகள்

எம்
புதுக்கவிதைகளெல்லாம்
பேனாக்கள் என்னும்
சோதனைக் குழாய்க்குள்
சூழ்கொண்ட சிசுக்கள்.

அவை
மரணத்தையே சுவாசித்துவிடும்
மகத்துவம் கொண்டவை.
ஆதலால் தான்

புக்கவிதையின் முகத்தில்
கரும்புள்ளி ;  செம்புள்ளி
குத்திய கைகளே
இன்று
திருஷ்டி பொட்டு வைக்கத்
தீர்மானிக்கின்றன.

              oooooo

வாழையடி வாழையாய்
இலக்கியத்தில் படிந்த
வாழைக்க கறையழிக்க
எம் பேனாவிலிருந்து
மைத்துளிகள்
எலுமிச்சம் பழச்சாறாய்
இறங்குகின்றன.

              oooooo

சூரியன் கூட
கிழக்கு மேற்கெனும்
யாப்பிற்கு கட்டுப்பட்டே
தன்
கிரணக் கவிதைகளைக்
கிறுக்கி வருகிறது.

அப்படிக் கூட நாங்கள்
அவதிப்படுவதில்லை

எங்கு உதித்தால்
வெளிச்சம்
எல்லார்க்கும் கிட்டுமென்று நாங்களே
தீர்மானித்து உதிப்போம்.

-------------------------------------திருத்திய எழுதிய தீர்ப்புகள் என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...