Thursday 15 December 2011

குறிஞ்சி மலர்

                                 நா.பார்த்தசாரதி (டிசம்பர் 18, 11932 - டிசம்பர் 13, 1987) புகழ் பெற்ற தமிழ் புதின எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற புதினங்களான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ளார்.

வாழ்க்கைச் சுருக்கம்

     தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நதிக்குடி இவரது பிறந்த ஊர். சராசரி நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். பாரதியார் ஆசிரியராய் இருந்த மதுரை சேதுபதிப் பள்ளியில் ஆசிரியராய் பணியாற்றினார். முறையாகத் தமிழ் கற்றவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து அந்தக் கால முறைப்படி இலக்கணச் சூத்திரங்களை மனப்பாடம் செய்து கல்வி கற்றவர். கல்கி இதழின் ஆசிரியர் சதாசிவத்தின் அழைப்பின் பேரில் அதன் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். கல்கியில் சேர்ந்து அவர் எழுதிய முதல் புதினம், குறிஞ்சி மலர்.

     1965 இல் கல்கி இதழில் இருந்து விலகி சொந்தமாக தீபம் என்ற மாத இதழை ஆரம்பித்தார். ஆசிரியராகவும் நிர்வாகியாகவும் இருந்து 23 ஆண்டுகள் அதை நடத்தினார்.

     1979ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிர்வாகத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த தினமணிக் கதிர் வார இதழுக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்தினார். சாயங்கால மேகங்கள், நிசப்த சங்கீதம், ராணி மங்கம்மாள் போன்ற நாவல்களை தினமணிக்கதிரில் எழுதினார். கதிரிலிருந்து விலகிய பின் பத்திரிகை உலகத்தைப் பின்புலமாக வைத்து சுந்தரக் கனவுகள் என் தலைப்பில் ஒரு புதினம் எழுதினார்.

பயண இலக்கியம்

     பயணக் கட்டுரைகளும் நா.பா. நிறைய எழுதினார். ரஷ்யா, இங்கிலாந்து, போலந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இத்தாலி, எகிப்து, குவைத் போன்ற பல நாடுகளுக்குச் சென்று அவர் எழுதிய பயணக் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை.

விருதுகள்

     சாகித்ய அகாதமி பரிசு (சமுதாய வீதி), ராஜா சர் அண்ணாமலை பரிசு (துளசி மாடம்), தமிழ்நாடு பரிசு போன்ற பல பரிசுகளும் விருதுகளும் பெற்றிருக்கிறார்.


     நாற்பத்தைந்து வயதிற்குமேல் எம்.ஏ. படித்துத் தேறி, டாக்டர் பட்டத்திற்குப் பதிவு செய்துகொண்டார். பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும் என் தலைப்பில் ஆய்வேட்டினையும் சமர்ப்பித்தார். ஆனால் டாக்டர் பட்டம் கிடைக்க இரண்டே நாட்கள் இருந்த நிலையில் இதய நோய்க்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுக் காலமானார்.

புதினங்கள்

1. ஆத்மாவின் ராகங்கள்
2. கபாடபுரம்
3. குறிஞ்சி மலர்
4. சமுதாய வீதி
5. துளசி மாடம்
6. நெஞ்சக்கனல்
7. பிறந்த மண்
8. ராணி மங்கம்மாள்
9. வஞ்சிமா நகரம்
10. பொன் விலங்கு
11. நித்திலவல்லி
12. சாயங்கால மேகங்கள்
13. நெற்றிக் கண்
14. வெற்றி முழக்கம் (உதயணன் கதை)
15. பாண்டிமாதேவி
16. சத்திய வெள்ளம்
17. மணிபல்லவம்
18. நிசப்த சங்கீதம்
அநுக்கிரகா
சுலபா
முள்வேலிகள்
புதுமுகம்
மூலக்கனல்
சுந்தரக் கனவுகள்
மலைச் சிகரம்
பொய் முகங்கள்
பூக்களை யாரும் மிதிக்கக் கூடாது
கற்சுவர்கள்
நினைவின் நிழல்கள்
மூவரை வென்றான்
நீல நயனங்கள்
மனக் கண்
கோபுர தீபம்
அனிச்ச மலர்
பட்டுப் பூச்சி
மகாத்மாவைத் தேடி

சிறுகதைகள்


கொத்தடிமைகள்
ராஜதந்திரிகள்
ஹைபவர் கமிட்டி
சுயமரியாதைக்கும் ஒரு விலை
ஒரு நட்சத்திரத்தின் தோல்வி!
வசதியாக ஒரு வேலை
கடைசியாக ஒரு வழிகாட்டி
ஞானச் செருக்கு
கூபே
கடைசியாக ஓர் ஆண்பிள்ளை
புகழ்த்துறவு
ஒரு வெறுப்பின் மறுபுறம்
பின்னக் கணக்கில் தகராறு
ஒரு கவியின் உள் உலகங்கள்
தமிழ் இலக்கியக் கதைகள்
ஒப்புரவு

கட்டுரை

மொழியின் வழியே 

---------------------------------------------------------------------------------------------------------------------------
 சிறப்புரை

     அரவிந்தன், பூரணி என்னும் இருவரையும் நூலைப் படித்து முடித்துப் பல நாட்கள் ஆன பிறகும் மறக்க முடியவில்லை. கற்பனையில் படைக்கும் மாந்தர்கள் இவ்வாறு கற்பவரின் நெஞ்சில் நெடுங்காலம் நிற்குமாறு செய்ய வல்லவர்களே கற்பனைத் திறன்மிக்க கலைஞர்கள்.

     அரவிந்தனும் பூரணியும் எய்தும் இன்ப துன்பங்கள் பல. அவை வீணில் உண்டு உறங்கி வாழும் மக்கள் எய்தும் எளிய இன்ப துன்பங்கள் அல்ல. ஆகவே அவை நம் நெஞ்சை நெக்குருகச் செய்து ஆழ்ந்து நிற்கின்றன.

     நாவல் என்பது பொழுதுபோக்குக்கான வெறும் நூலாகவும் அமையலாம். வாழ்க்கையின் உண்மைகளை உணர்த்திக் கற்பவரின் உள்ளங்களை உயர்த்தவல்ல இலக்கியமாகவும் அமையலாம். அவ்வாறு விருப்பம் உடையதாக அமையும் போது, அது பழங்காலத்துக் காவியத்துக்கு நிகர் ஆகின்றது. காவியம் என்பது உரைநடை வளராத காலத்தில் செய்யும் வடிவில் அமைந்த கலைச் செல்வம்; நாவல் என்பது உரைநடை வளர்ச்சியால் இவ்வடிவில் அமையும் கலைச் செல்வம். இதுதான் வேறுபாடு.

     புலவர் திரு. நா. பார்த்தசாரதி பழந்தமிழ் இலக்கியங்களை நன்கு கற்றுணர்ந்தவர். புதுத் தமிழ் இலக்கிய வளர்ச்சியையும் நன்கு அறிந்தவர். ஆதலின் இந்த நாவலை மரபு பிறழாத கலைத் திறனுடன் இயற்றியுள்ளார். குறிஞ்சி மலர் என்ற பெயர் அமைப்பிலும் இந்தத் திறன் புலனாகிறது.

     இடையிடையே உள்ள இயற்கை வருணனைகளும், நகரப் பகுதிகளின் விளக்கங்களும் நன்கு அமைந்துள்ளன. இந்த நாவலாசிரியரின் கற்பனைக் கண் பண்பட்டு வளர்ந்துள்ளது. உள்ளத்து உணர்ச்சிகளையும் போராட்டங்களையும் விடாமல் விளக்கியுள்ளதோடு உயர்ந்த மாந்தரின் விழுமிய நோக்கங்களுக்கு ஏற்ப பண்பாடு குன்றாமல் காத்துள்ளார் என்பதும் பாராட்டத்தக்கது. தேர்தல் காலத்தில் நிகழும் காட்டுமிராண்டித் தன்மையான கொடுஞ்செயல்களை இவர் தக்க இடத்தில் எடுத்துக் காட்டியிருப்பது காலத்துக்கு ஏற்ற நல்ல தொண்டு ஆகும்.

     'குறிஞ்சி மலர்' வெல்க!

மு. வரதராசன்




 இந்த நாவலைடவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும் 

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...