Tuesday 3 April 2012

தமிழன்பன் கவிதைகளில் கவின் பரல்கள்

கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிதைகளை 2004 ஆண்டுவரை வெளிவந்த கவிதைத் தொகுப்புகளில் உள்ள முத்துக்களைப் போன்ற சில கவிதைகளை தொகுத்து நமக்கு வழங்கியுள்ளனர். அந்த தொகுப்பு ஒரு எழுத்தாளனனின் பல்வேறு மனநிலைகளை நமக்குக் காட்ட வல்லது. கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிதைகளில் காணப்படும் முத்துக்களை பொறுக்கிக்கொள்ள நாமும் தயாராவோம்...

அரசியல்

கொடி மரங்களைப் போலவே
கட்சிகளுக்கும் இங்கே
இலட்சிய வேர்கள் இல்லை

------------------தீவுகள் கரையேறுகின்றன

பெண்ணே !
திசைகளில் கோளாறு இருக்கிறது
தேசப்படங்களைத்
திருத்திக்கொண்டிருப்பதால் என்ன பயன்

---------------- அந்த நந்தனை எரிச்ச நெருப்பின் மிச்சம்

இயற்கை

இயற்கை 
திராட்சையைச் சிந்தித்தது
மனிதனோ
போதையைச் சிந்தித்தான்

---------------- உன் வீட்டிற்கு நான் வந்திருந்தேன் வால்ட்விட்மன்

பூக்களைப் பற்றிப்
பேசத் தெரிந்தால் வாருங்கள்
நம்
நேரமும் மணக்கும்.
அன்றியும்
பொய் சொன்னதாய்ப்
பூக்களைப் பற்றிக்
குறைகூற முடியாது உங்களால்

---------------------- கிழக்குச் சாளரம் 

கடல், நிலம், நிலா
இவற்றைப் படைத்தபோது
நூற்றுக்கு நூறு மதிப்பெண்
பெற்றது இயற்கை.
மனிதனைப் படைத்துவிட்டுப்
 பூஜ்ஜியம் வாங்கியது.

--------------------------- திரும்பி வந்த தேர்வலம்

நட்சத்திரங்களுக்கு
எழுதப் படிக்கத் தெரியாது.
ஒளிவிடத் தெரிகிறதே.... போதாதா?

------------------------------ மின்மினிக் காடு

ஒளியின் தியானமே இருள்
ஒடுக்கத்தின் விரிவே இருள்
விடுதலையின் நிறமே இருள்.

---------------------------------- இரவுப் பாடகன்

கல்வி

கல்வி
மதிப்பெண்களுக்காக
அதிகாரப்பூர்வமாகக்
கற்பழிக்கப்படுகிறது.

---------------------------------- அந்த நந்தனை எரிச்ச நெருப்பின் மிச்சம் 
தேர்வுகளைவிட - இந்தத்
தேசத்தில் 
வன்முறைச் சம்பவம்
எதுவும் கிடையாது.

---------------------------------- அந்த நந்தனை எரிச்ச நெருப்பின் மிச்சம்

கவிக்குரல்

எதற்கு
இந்த முயற்சி?
சூரிய ஊரில்
ஒரு படி இருட்டைக் கூட
விற்கமுடியாது

----------------------------- மின்மினிக் காடு
இவ்வாறு கவிஞரின் உள்ளம் பல்வேறு மனநிலையுடன் எழுதிச் செல்கிறது.
கவிஞனை நாம் அணுகும்போது அவனது மனநிலையோடு நாமும் பயணிக்க இத்தகைய தொகுப்புகள் அவசியமாகின்றன.

இதன் பதிப்பாசிரியர்கள் 
வ.ஜெயதேவன்
ய.மணிகண்டன்
முரளி அரூபன்

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...